Saturday, 1 December 2012

ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை


ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை!

சமூக அறிவியல், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், மொழியியல், இலக்கியம் போன்ற பல்வேறு பிரிவுகளின்கீழ் முழுநேர ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் மைசூரை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் ஓர் அங்கமான சி.ஐ.ஐ.எல். வழங்கும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

ந்திய மொழிகளுக்கான மத்திய அரசு நிறுவனத்தில் ( CIIL - Central Institute of Indian Languages) ஆண்டுதோறும் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ளும் 10 மாணவர்களுக்கும், போஸ்ட் டாக்டோரல் என்று அழைக்கப்படும் முதுமுனைவர் பட்டஆவை மேற்கொள்ளும் 5 மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இந்த உதவித்தொகைப் பெற விரும்பும் மாணவர்கள், மொழியியல், இலக்கியம், சமூக அறிவியல், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்று ஏதேனும் ஒரு பாடத்தில் முதுநிலை பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் அல்லது உயர் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது ஆய்வு நிறுவனத்தில் பிஎச்.டி. அல்லது போஸ்ட் டாக்டோரல் படிப்பை மேற்கொள்ள பதிவு செய்திருக்க வேண்டும்.


முழுநேரமாக ஆய்வுப் படிப்பில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை அளிக்கப்படும். பகுதி நேரமாக ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்பவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியாது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு, முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்பவர்கள் 40 வயதுக்குட்பட்டவராகவும், முது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்பவர்கள் 50 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டியது அவசியம். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவு மாணவர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.


இந்த உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும். இந்த உதவித்தொகை மொத்தம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மாணவர்களின் நடவடிக்கை, ஒழுக்கம் போன்றவற்றை கருத்தில்கொண்டு, உதவித்தொகை வழங்கப்படும் காலத்தை கூடுதலாக ஓர் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுவரை நீட்டிக்கவும் சி.ஐ.ஐ.எல்.க்கு அதிகாரம் உண்டு. இந்த உதவித்தொகையைத் தவிர்த்து, ஆராய்ச்சிக் காலத்தில் ஆண்டுதோறும் மாணவர்கள் ஆராய்ச்சி ஏடுகள், ஆராய்ச்சிக் கருவிகள் மற்றும் போக்குவரத்துச் செலவிற்காக ரூ.20 ஆயிரம் உதவித்தொகை பெறலாம். போஸ்ட் டாக்டோரல் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இந்த உதவித்தொகை வெறும் இரண்டு ஆண்டு காலத்திற்கு மட்டுமே அளிக்கப்படும். மாணவர்களின் நடவடிக்கை கருதி உதவித்தொகையை கூடுதலாக ஓர் ஆண்டு சி.ஐ.ஐ.எல். வழங்கலாம். இதுதவிர ஆராய்ச்சிக்கால செலவினத்திற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுக்கு தலா ரூ.30 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: நவம்பர் 28.


விவரங்களுக்கு :
www.ciil-miles.net