Wednesday, 22 August 2012

யார் இந்த பெரியார்?5

மாண்டேகு செம்ஸ்போர்ட் திருத்தம்
மனநல மருத்துவர் ஷாலினி
எங்கோ எதனாலேயோ ஏற்படுகிற ஒரு மாற்றம், வேறெங்கோ யாரோ ஒருவரின் வாழ்வில் எவ்வளவு பெரிய எதிர்மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு வரலாறு முழுக்க நிறைய உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்று தான் முதலாம் உலகப்போர். இந்தப் போர் முடிந்த பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குப் பெரிய பொருள் சேதமும், மனவருத்தமும் ஏற்பட்ட பின்னர், அவர்களுக்கு இந்திய மண்ணின் மைந்தர்களைப் பற்றிய கருத்து மாற ஆரம்பித்திருந்தது. அதுவரைக் கடைநிலை ஊழியர்களே ஆனாலும் சர்க்கார் உத்தியோகம் என்றால் வெள்ளைக்காரரின் ஆதிக்கத்தில் இருந்தே ஆகவேண்டும் என்று முன்பு கருதி இருந்தது போய், நகர்ப் பராமரிப்பு மாதிரியான லோக்கல் விஷயங்களை, லோக்கல் இந்தியர்களே கவனித்துக்கொள்ளட்டுமே, சின்னச் சின்னப் பொறுப்புகளை இந்தியர்களே கவனித்துக்கொண்டால் தானே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பெரிய பெரிய விஷயங்களில் முழு கவனம் செலுத்த முடியும் என்ற கருத்து, தலைதூக்க ஆரம்பித்திருந்தது.
இந்தக் கருத்தை முன் மொழிந்த எட்வர்ட் சாமுவெல் மாண்டேகு, அப்போது இந்தியாவின் செக்ரெட்டரி ஆஃப் ஸ்டேட்டாக இருந்தார். செம்ஸ்போர்ட் துரை அப்போது இந்தியாவின் வைசிராயாக இருந்தார். இந்த இரண்டு மனிதர்களும் ஒன்று சேர்ந்து, இந்தியர்களுக்கு ஒரு குறைந்த பட்ச சுய ஆட்சி உரிமை வழங்கச் சிபாரிசு செய்தார்கள். இந்தப் பரிந்துரையை மாண்டேகு செம்ஸ்போர்ட் திருத்தம் என்ற திருநாமத்துடன் பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் ஏற்றுக்கொண்டுவிட, நகரசபை உறுப்பினருக்-கான, தேர்தலில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இந்தியர்களுக்கு முதன் முதலில் கிடைத்தது.
         மெட்ராஸ் பிரெசிடென்சியில் இந்த நகரசபைக்கான தேர்தல்கள் நடைபெற்றன. அந்தக் காலத்தில் மொத்தம் 98 தொகுதிகளில் தேர்தல்கள் நடந்தன. அதில் ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்ட South Indian Liberal Federation,, 63 இடங்களில் வெற்றிபெற்றது; ஆட்சியை அமைத்தது. . சுப்பராயலு நாயுடு என்பவர் மெட்ராஸ் பிரெசிடென்சியின் முதல், முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்தத் தேர்தலைக் காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. ஜஸ்டிஸ் கட்சியின் வெற்றிக்குக் காரணமாய் இருந்தாலும் இந்தப் பிராமணர் அல்லாதவரின் கட்சி ஆட்சிக்கு வந்தது சிலருக்குக் கவலையைத் தந்தது.
காரணம், இந்த ஜஸ்டிஸ் கட்சி உருவானதே பிராமணரை எதிர்த்துக் குரல் கொடுக்கத்-தான். பிராமணரை எதிர்த்துக் குரல் கொடுக்க, அப்படி என்ன அவசியம் வந்து-விட்டதாம் என்று நீங்கள் யோசித்தால், ஒரு சின்ன உதாரணம்: சர்.பிட்டி தியாகராயர் என்பவர் அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற வணிகர். இன்று ஷாப்பிங் உலகின் தலைநகராய் இருக்கும் தி.நகர் என்கிற தியாகராயநகர் இவர் நினைவால் அப்படிப் பெயர் சூட்டப்பட்டது என்றால் அவர் எவ்வளவு முக்கியமான புள்ளியாக இருந்திருப்பார் என்று பாருங்கள். அதுவும் போக, பிரிட்டிஷ் சர்க்காரே இவருக்கு சர் பட்டம் கொடுத்துக் கவுரவித்திருந்தது. அப்பேர்ப்பட்ட புகழ் வாய்ந்த இந்தத் தியாகராயர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அடிக்கடிப் போவது வழக்கம். அந்தக் கோயிலின் குடமுழுக்கு விழாவிற்கு இவர் எக்கச்சக்கமாய் நன்கொடை வசூலித்துத் தந்திருந்தார். இவ்வளவு இருந்தும் அந்த விழாவிற்கு அவரை வரவிட-வில்லை கோயில் பூசாரிகள். காரணம், சர் பிட்டி தியாகராயர், ஒரு பிராமணர் அல்ல என்பது மட்டுமே.
இப்படி எல்லாம் நோகடித்தால் கோபம் வராதா பின்னே? இப்படிப் பிராமணர்-களின் நாங்க எல்லாம் உசத்தி, நீங்க எல்லாம் மட்டம் என்கிற இந்த சுப்பீரியாரிட்டி சிந்தனையும் ஆதிக்கப் போக்குமே அவர்-களுக்குப் பல விரோதிகளை ஏற்படுத்த, பிராமணர்களை எதிர்த்துப் பல பெரிய புள்ளிகள் ஒன்று கூடி உருவானதுதான் இந்த சவுத் இந்தியன் லிபரல் ஃபெடரேஷன். இந்தக் கட்சி, ஜஸ்டிஸ் என்கிற ஒரு ஆங்கில நாளேட்டை வெளியிட்டு, மான உணர்வு-களைத் தூண்டியதாலேயே, இதற்கு ஜஸ்டிஸ் கட்சி, நீதி கட்சி என்கிற செல்லப் பெயர்கள் ஏற்பட்டன.
காங்கிரஸ் மாதிரியான அகில இந்தியக் கட்சிகளின் முக்கிய இடங்களில் பிராமணர்-களே சக்தி வாய்ந்திருக்க, இந்த ஜஸ்டிஸ் பார்ட்டி உருவான மூன்று ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்திருந்தது என்றால், பொது மக்களும் அந்தப் புதுக் கட்சியைப் பெரிதாக ஆதரித்-தார்கள் என்று தானே அர்த்தமாகும். இந்தப் பொது மக்கள் ஏன் இந்தப் புதுக் கட்சியை ஆதரித்தார்கள்? இவ்வளவு செல்வாக்கும், பிரிட்டிஷ் சர்க்காரின் ஆதரவும் இருந்துமே சர்.பிட்டி தியாகராயருக்குக் கோயில் விழாவில் பங்கு பெறத் தடை என்றால், சாமானிய மக்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்! எப்போதுமே, நீ மட்டம் நான்தான் கிரேட் என்று யார் சொன்னாலும், கேட்கிறவருக்கு எரிச்சல் வருவது இயல்புதானே. இதனால் பிராமண விரோதப் போக்கு தென் இந்தியாவில் மிக அதிகமாக இருந்தது.
இப்படிப் பிராமணர் அல்லாதவர்களின் கரம் வலுப்பெற்றுக்கொண்டே போனால், அரசியலில் பிராமணர்களின் நிலை தடுமாறிவிடுமே? இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய என்ன வழி? பொது மக்களுக்குப் பிராமணர்களின் மீது எரிச்சல் ஏற்பட்டிருந்த இந்த நிலையில் ஒரு பிராமணரே தன்னிலை விளக்கமெல்லாம் கொடுத்து மக்கள் செல்வாக்கைச் சம்பாதிப்பதென்பது கிட்டத்தட்ட முடியாத காரியம். ஆனால், ஒரு சக்திவாய்ந்த பிராமணர் அல்லாதவரை ஜஸ்டிஸ் கட்சிக்காரர்-களுக்கு எதிரில் முன் நிறுத்தினால், அவர்களுக்குள் பிரிவினை ஏற்படுமே!

அப்படி ஜஸ்டிஸ் கட்சியின் பெரும் மக்கட் செல்வாக்கை முறியடிக்கக்கூடிய மனிதன் யார்? ராஜகோபாலாச்சாரியாருக்குத் தெரிந்தவரை, இந்தத் தகுதி வாய்ந்த ஒரே மனிதர், . வே. ராமசாமி நாயக்கர் மட்டும்தான். காரணம், 1) ராமசாமியார் ஒரு கடும் வைணவ மரபைப் பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜாஜியும் வைணவர், மோகன்தாஸும் ராம நாமம் ஜபிப்பவர். ராமசாமியின் குடும்பமோ ராமபக்திக்குப் பெயர் பெற்றது. 2) ராமசாமி மிகுந்த மக்கட்செல்வாக்குப் பெற்றவர். 1910இல் ஆரம்பித்து ஈரோட்டில் அவர் சம்மந்தமில்லாமல் எந்தக் காரியமும் நடந்ததில்லை. அது, குடிநீர்க் குழாய் திறப்பதாகட்டும், வியாபாரிகளின் சண்டை-களைப் பைசல் பண்ணித் தருவதாகட்டும், வருமானவரியை நிர்ணயிப்பதாகட்டும், ராமசாமியே எல்லாவற்றிலும் முன் நின்றார். 3) மக்கட் செல்வாக்கு ஒரு பக்கம் என்றால், ஈரோடு நகரசபைத் தலைவராக இருந்து அவர் ஆற்றிய சேவைகளைப் பாராட்டிப் பிரிட்டிஷ் சர்க்கார் அவருக்கு ராவ்சாகிப் பட்டமெல்லாம் கொடுத்துக் கவுரவப்படுத்துவதாக இருந்தது. 4) ராமசாமி ரொம்பப் பெரிய பணக்காரர், ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாகத் தொடங்கப்-பட்ட சென்னை மாகாண சங்கம் என்கிற கட்சிக்காக ஆயிரக்கணக்கில் பணத்தை நன்கொடையாகக் கொடுத்தவர். 5) இது எல்லாம் போக ராமசாமி ஒரு ஸ்வாரசியமான பேச்சாளர். எளிமையாக, நகைச்சுவையோடு, ஸ்வாரசியமாய்ப் பேசும் போக்கு அவருக்கு இளமையிலேயே உண்டே. இவரைக் கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்தால், மனிதர் தங்குதடையின்றிப் பேசியே எல்லோர் இதயங்களையும் அள்ளோ அள்ளு என்று அள்ளிவிட, இத்தனை தகுதிகள் வாய்ந்த இந்த மனிதரை விட்டுவிடக்கூடாது என்று தோன்றியது ராஜாஜிக்கு.
ராஜாஜி சேலம் ஜில்லா முனிசிபாலிட்டித் தலைவர், அதுவும் போக, வரதராஜூலு நாயுடுவின் வக்கீல் இந்த ரீதியில் ராம-சாமியாருக்கும், ராஜாஜிக்கும் ஏற்கெனவே நல்ல ஸ்நேகிதம் இருந்தது. ராமசாமியாரை மிகவும் நுணுக்கமாகக் கவனித்து எடைபோடும் வாய்ப்பு இதனாலேயே அமைந்துவிட, ராஜாஜிக்கு ஒரு யோசனை தோன்றியது. இத்தனை தகுதிகள் வாய்ந்த இந்த ராமசாமி நாயக்கரைக் காங்கிரஸில் சேர்ந்துக்கொண்டால், ஜஸ்டிஸ் கட்சியாவது இன்னொன்றாவது, சுலபமாய் மக்கள் மனதை ஜெயித்துவிடலாமே!
இந்த எண்ணம் ஏற்பட்டதுமே அவர் ராமசாமியாரைக் காங்கிரஸில் சேரும்படி வற்புறுத்த ஆரம்பித்தார். இதற்கிடையில் ராஜாஜிக்காக, கல்யாணசுந்தரம் முதலியாருக்-காக, லார்ட் கோவிந்ததாசுக்காக, நாகை பக்கிரிசாமி பிள்ளைக்காக, டாக்டர் பி. டி. ராஜனுக்காக என்று நண்பர்கள் அழைத்ததினா-லேயே காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த ராமசாமியாருக்கும், மெல்ல மெல்ல அது பிடித்துப் போக ஆரம்பித்தது. இவர் பேசியதைப் பற்றியும் செய்தவற்றைப் பற்றியும் பத்திரிகைகளில் ஆஹா ஓஹோ என்று எல்லோரும் புகழ்ந்து தள்ள, தொழிலைவிட, இந்தக் கட்சி நடவடிக்கைகள் ராமசாமியாருக்கு ஸ்வாரசியமாகத் தோன்ற ஆரம்பித்தன.
அதனால் ராஜாஜி அவரிடம், சேலம் முனிசிபாலிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா பண்ணிவிட்டு மெட்ராஸ் போய்க் கட்சிப் பணிகள்ல ஈடுபடலாம்னு இருக்கேன். நீரும் வாரும் என்று கேட்டபோது, ராமசாமியாருக்கு அந்த எண்ணம் பிடித்துப்போனது. காங்கிரஸ்ல சேர்ந்தா ஜாதியை ஒழிக்கலாம், சமநீதி கொண்டு வரலாம், மக்களுக்கு நன்மை செய்யலாம் என்று ராஜாஜி மேலும் மேலும் விளம்பரப்படுத்த, ராமசாமி உடனே முடிவு செய்துவிட்டார். தானும், தன் பதவிகள் அனைத்தையும் விட்டுவிட்டுக் காங்கிரஸிஸ் சேர்ந்து மக்களுக்குப் பணி செய்வதென்று, வேறு எதையுமே யோசிக்காமல் ஒரு காகிதத்தை எடுத்தார். ஈரோட்டில், தான் அதுவரைத் தலைமை வகித்த எல்லாப் பணிகளில் இருந்தும் விடுப்புக் கேட்டு ராஜினாமா கடிதம் எழுதித் தந்தார். காங்கிரஸில் சேர ஆயத்தமானார்.
(தொடருவார்....)


யார் இந்த பெரியார்? - பதவிகளைத் துறந்தார்
மனநல மருத்துவர் ஷாலினி
1918 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போர் முடிந்திருந்தது. இந்த உலகப்போரில் கிட்டத்-தட்ட ஒன்றேகால் இந்தியர்கள் பிரிட்டிஷ் தரப்பில் போருக்குப் போயிருந்தார்கள். இதில் சில பேர் போரில் இறந்து போயிருந்தார்கள். சில பேர், அப்பாடா போர் முடிஞ்சிடிச்சி, இனி வீடு போய்ச் சேர்ந்து நிம்மதியா இருக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால், சிலர் வேறு விதமாய் யோசித்தார்கள். போரில் தாங்கள் பயன்படுத்திய பிரிட்டிஷ் ஆயுதங்களைச் சமர்ப்பிக்காமல் அவற்றைக் கடத்திக்கொண்டு இந்தியாவிற்குத் திரும்பினார்கள். இந்த ஆயுதங்களை வைத்தே பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக ஒரு யுத்தம் புரியலாம் என்பது அவர்களின் ரகசியத் திட்டம். இதற்கு அயல்நாட்டில் வாழ்ந்த இந்திய வம்சா-வழியினரின் ஆதரவும் இருப்பது பிரிட்டிஷ் சர்க்காரின் உளவுத் துறைக்குத் தெரிய வர, உடனே உஷாராகிப் போனது பிரிட்டிஷ் நிருவாகம்.
சந்தேகத்திற்கு இடமான இந்தியர்களை எந்தக் காரணமோ, ஆதாரமோ இன்றிக் கைது செய்யும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது. கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு பயங்கரவாத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தை இந்திய அரசாங்கமும் பிற்காலத்தில் POTA என்கிற பெயரில் அமல்ப்படுத்தியது நமக்கு நினைவிருக்கலாம். ஆனால், பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய இந்தப் புதியவிதிக்கு ரவுலத் சட்டம் என்று பெயர் சூட்டி, புதிய அடக்கு முறையை அமலுக்குக் கொண்டு வர, இதை மோகன் தாஸ் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தார்கள்.
மோகன் தாஸ் காந்தி அப்போது சத்யாக்-கிரகம் என்கிற யுத்தியைத்தான் பெரும் அளவிற்குப் பயன்படுத்தினார் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். நேரடியாக எதிர்த்துப்-போராடும் சுதந்திரம் இல்லை என்றால், ஒத்துழைக்காமல் அமைதியாய் இருந்தே காரியத்-தைச் சாதிக்கும் முயற்சிதான் சத்யாக்கிரகம். உளநலத்தில் இதை passive aggression என்போம். இது ஒரு முதிர்ச்சி இல்லாத தற்காப்பு முறை என்று சிக்மெண்ட் ஃபிராய்ட் பாகுபடுத்தி இருந்தார். ஆனால், காந்தி ஃபிராய்டைப் படித்தாரோ இல்லையோ, அதனால் தன்னுடைய சத்யாக்கிரகம் என்கிற அஸ்திரத்தை மிக ஸ்ரத்தியாய் அவர் வீசி எறிய, அவர் கூக்குரலைக் கேட்டு, ஏராளமான இந்தியர்கள், தாங்கள் அதுவரை வகித்த அரசுப் பணியிலிருந்து ராஜினாமா செய்தார்கள்.
இப்படி யாரோ ஒரு தலைவன், எங்கேயோ இருந்துகொண்டு தனக்குச் சரி என்று பட்டதைச் சொன்னால், கேட்பவர் தன் சொந்த அறிவைப் பயன்படுத்தி, இது சரிப்பட்டு வருமா வராதா, இதன் பின் விளைவுகள் என்ன என்று யோசித்து, சுயமாய் ஒரு முடிவிற்கு வந்தால் ஷேமம். அதை விட்டுவிட்டு, தலைவர் சொன்னா மறுப்பில்லை என்று கண்மூடித்தன-மாக அடிபணிந்துவிட்டால் பிரச்சினைதான். காந்தி சொன்னார் என்பதற்காக டாக்டர் சத்யா பால், என்பவரும் சயஃப்ஃபுதின் கிச்லூ என்கிற வழக்குரைஞரும் ரவுலத் சட்டதை விமர்சித்து எதிர்த்துவிட, பிரிட்டிஷ் நிருவாகம் உடனே அவர்களைக் கைது செய்து இருப்பிடம் தெரியாமல் செய்துவிட, பொது மக்கள் கலவரமுற்றார்கள்.
இந்த ரவுலத் சட்டம் இப்படி நிரபராதி-களையும் தண்டிக்கிறதே என்று அதை எதிர்த்து, பொது மக்கள் கூடிப் பேசினார்கள். இப்படி அம்ரிட்சரில் ஜாலியன் வாலாபாக் என்கிற இடத்தில் பொது மக்கள் கூடிப் பேசிய போது, அங்கு திடுதிப்பென்று வந்த ஜெனரல் டையர், தன் ராணுவ வீரர்களுக்குச் சுட உத்தரவிட்டார். இதை எதிர்பார்க்காமல் கூடி இருந்த மக்கள் எல்லோரும் சரமாரியாக வந்து விழுந்த புல்லெட்டுகளுக்குப் பலியானார்கள். தப்பி ஓடவும் முடியவில்லை, இருந்த ஒரே வழியையும் ராணுவ அதிகாரிகள் மறைத்துக்கொண்டு சுட்டுத்தள்ள, ஒருவரை மற்றவர் தள்ளி மிதித்து ஓடித் தப்பிக்க முயல, பெரிய கலவரமே வெடித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடிபட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தே போனார்கள்.
இது பொது மக்களை ரொம்பவே பாதித்திருந்தது. பிரிட்டிஷ் சர்க்காரின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து இன்னும் தீவிரமாகக் காந்தி குரல் கொடுக்க, மேலும் பலர் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்து விட்டு, தேசப் பணியில் இறங்கிவிடத் தயாரானார்கள்.
நாடே இப்படி அல்லோலப்பட்டுக் கொண்-டிருக்கும் போதுதான் ராமசாமி நாயக்கர், ராஜகோபாலாச்சாரியாரின் பேச்சைக் கேட்டுக்-கொண்டு தான் அதுவரை வகித்த எல்லாப் பொறுப்புகளையும் ராஜினாமா செய்வதாய் எழுதிக் கொடுத்துவிட்டார். இந்த மனுசனுக்கு என்ன வந்தது? பணம், பதவி, வசதி, மக்கட்செல்வாக்கு என்று எல்லாமே இருப்பவர் தானே, இதை வைத்துக்-கொண்டு வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்-காமல், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, திடுதிப்-பென்று ஏன் இப்படி வேறு ஊருக்குப் போக வேண்டும் என்று இவருக்குத் தோன்றியது? சகல சௌபாக்கியமும் இருப்பவர்களுக்குத் தானே சீக்கிரம் அது அலுத்துப்போகும். எதுவுமே இல்லாதவர்கள், அடுத்து இது கிடைக்குமே என்ற தேடலிலும் ஆசையிலும் வாழ்வை அணுகுவதால் அவர்களுக்கு வாழ்வில் பற்று அதிகமாகவே இருக்கிறது. எல்லாம் இருப்பவர்-களோ, இது எல்லாமே இருந்தும் அலுப்புத் தட்டுகிறதென்றால், வாழ்க்கையின் குறிக்கோள்-தான் என்ன என்கிற ஆன்மீகத் தேடலுக்கு உட்படுகிறார்கள். இப்படி ஒரு தேடல் ராமசாமிக்கு எப்போதுமே இருந்து வந்தது. அவரது இந்த ஆடம்பர வெளிவாழ்க்கையையும் மீறி அவருக்குள் ஒரு துறவி இன்னும் உலவிக்-கொண்டேதான் இருந்தான். பற்றுகளை அறுத்துக்-கொண்டு, பொதுமக்களுக்காகப் பணியாற்றும் எண்ணத்தை இந்தத் துறவி தூண்டிக்கொண்டே இருக்க, ராமசாமியார் ஈரோட்டைவிட்டுப் போக ஆயத்தமானார்.
அவர் தன் பெரும் பதவிகள் அனைத்தையும் ஒரே நாளில், ஒரே காகிதத்தில் எழுதி ராஜினாமா செய்த தகவல் சுதேசமித்திரன், இந்து ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துவிட, முன்பு ஈரோட்டில் சப்_கலெக்டராக இருந்த திருவாளர் சர் பி.ராஜகோபாலாச்சாரியர் என்கிறவர் கண்ணில் இது பட்டுவிட்டது. சர் பி. ஆருக்கு ராமசாமியாரை நன்றாகத் தெரியும். ஈரோடு முனிசிபல் தலைவராக இருந்த போது ராமசாமியார் அந்த ஊருக்கு முதன் முதலில் குழாய் மூலம் சுத்தமான குடிநீரைக் கொண்டு வந்து விநியோகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் குழாய் திறப்பு விழாவிற்கு சர் பி. ஆரும் அவர் மனைவியும் தான் தலைமை தாங்கி இருந்தார்கள். அதன் பிறகு சர் பி. ஆர் சென்னைக்கு மாற்றலாகிவிட்டிருந்தார். ஆனால், ராமசாமியாரைப்பற்றிய செய்தியைப் படித்தவுடன், மறுநாளே ஈரோடு ரயில் நிலையத்தில் தன்னை வந்து பார்க்கும்படி ஒரு அவசரத் தந்தியை அனுப்பினார்.
மறுநாள் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றதும், ராமசாமி அதில் ஏறினார். சர் பி. ஆரைப் போய்ச் சந்தித்தார். சர் பி. ஆர் தன் மலையாள மனைவியுடன் உள்ளே இருந்தவர், ராமசாமியைக் கண்டதும் எழுந்து ரயிலை விட்டு இறங்கி வெளியே நின்றுவிட, திருமதி பி. ஆர், ஈரோட்டுத் தலைவராக ராமசாமி செய்த சாதனைகளை நினைவு கூறி, தன் பதவிகளை ராஜினாமா செய்யவே கூடாது என்று வலியுறுத்தினார், அய்யர் உங்களுக்கு ராவ் சாகிப் பட்டம் சிபாரிசு பண்ணியிருக்கார். அவருக்கு அவமானமாகிவிடும், அவர் ரொம்பவும் வருத்தபடுவார். நீங்க கண்டவங்க பேச்சைக் கேட்டு ராஜினாமா கொடுத்து-விடாதீர்கள், அதை வாபஸ் வாங்குங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
வாபஸ் வாங்கினால் எனக்கு அவமானம். நான் அந்த ஊர் மக்களின் முகத்தில் எப்படி விழிப்பேன், வாபஸ் வாங்கவே முடியாது என்று ராமசாமியார் பிடிவாதமாய்ச் சொல்லிவிட, திருமதி சர் பி. ஆர் அவர்கள் கணவனுக்கு ஜாடை செய்ய, அவர் ரயிலினுள் வந்தார். அவரை பார்த்ததும் ராமசாமியார் மரியாதை நிமித்தமாய் எழுந்து நிற்க, சிட் டவுன் மை பாய் என்று அவர் கையைப் பிடித்து உட்கார வைத்தார் சர் பி. ஆர். உனக்குப் பாலிடிக்ஸ் தெரியாது, உனக்கு அது தகுதியல்ல. நீ ஒரு நல்ல வியாபாரி, எனக்கு ஏராளமான பெருமை இருக்கிறது, அரசாங்கத்தில் உன் மீது ரொம்ப நல்ல அபிப்ராயம், இதை எல்லாம் விட்டு நீ ஏன் போக வேண்டும்? என்றெல்லாம் சொல்லி, அவரே தன் கைப்பட, நான் ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் என்று ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்து, கையெழுத்துப் போடச் சொன்னார்.
ஆனால், ராமசாமியோ பின் வாங்க முடியாதே என்று மறுத்துவிட, சர் பி. ஆருக்குக் கோபம் வந்தது, பண்டித மதன் மோகன் மாளவியாவே தான் கொடுத்த ராஜினாமாவை வாபஸ் வாங்குகிறார், நீ என்ன பிடிவாதம் செய்கிறாயே? என்று திட்டினார். அவர் எவ்வளவு சொல்லியும் ராமசாமி முடியாது என்று மறுத்துவிட, நீ தவறான முடி-வெடுக்கிறாய். வருத்தப்படுவாய், இனி உன் இஷ்டம் போ என்று அவரை அனுப்பிவிட்டார் சர் பி. ஆர். இந்தச் சம்பவத்தைப்பற்றி ராமசாமி-யார் ராஜாஜியிடம் சொல்ல, அவருக்கு ரொம்-பவே திருப்தி, தனக்கு இப்படி ஒரு கொள்-கைவீரன் கிடைத்தால் சந்தோஷமாய் இருக்காதா பின்னே!
அதனால் ராஜாஜி, சென்னையில் நான் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்திருக்கிறேன், நீரும் உம்ம மனைவியோடு அங்கேயே வந்து தங்கி இருந்து கட்சிப் பணிகளைப் பார்க்கலாம் என்று அழைத்தார். டாக்டர் வரதராஜ நாயுடுவோ, சேலத்திற்கு வந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டார். ராமசாமிக்கோ, ஈரோட்டில் இருப்பது பெரிய அலுப்பாய் இருந்தது, சரி, ஜாகையை மாற்றிவிடலாமே என்று கூட யோசித்தார். ஆனால் நாகம்மையார் விடவில்லை, உனக்கு என்ன பைத்தியமா? நம்ம நிலை என்ன? ஆளு அன்பு வாழ்க்கை என்ன? வீடு வாசல், மாடுகளை விட்டு எங்க போறது? நீ வேண்ணா போ, நான் வர மாட்டேன் என்று அவருக்கு மேல் ஒரு அடம் பிடிக்க, ராமசாமி தன் மனைவியின் வார்த்தைகளை ஏற்றுக்-கொண்டார். சரி, எங்கும் போகலை, இங்கேயே இருக்கேன், இங்கேயே இருக்கேன், ஆனா நான் சொல்றபடி நீ கேட்கவேண்டும் என்று பேரம் பேசினார் ராமு. நாகம்மையார் அதற்கு ஒப்புதல் தெரிவித்துவிட, ராமு அடுத்த கட்ட நடவடிக்-கைகளில் ஈடுபட ஆரம்பித்தார். அதென்ன அடுத்த கட்ட நடவடிக்கை? அது பற்றி எல்லாம் அடுத்த உண்மையில்..
(தொடருவார்....)

No comments:

Post a Comment